மின்னல் தாக்கி 5 மாடுகள் செத்தன
விருத்தாசலத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் மின்னல் தாக்கியதில் 5 மாடுகள் செத்தன
கடலூர்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 9-ந் தேதி கரையை கடந்த நிலையில், தற்போது வட மற்றும் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூரில் நேற்று காலை முதல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இடையிடையே சூரியனும் தலைகாட்டியது. இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது. இதற்கிடையே 2 மணி அளவில் கரு மேகக்கூட்டங்கள் கலைந்து வெயில் தலைகாட்ட தொடங்கியது.
கரைபுரண்டு ஓடியது
திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. மேலும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது.
இதேபோல் விருத்தாசலம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் அனைத்து நீர்வரத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
சிதம்பரம்
சிதம்பரத்தில் நேற்று மதியம் 12 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. சில நிமிடங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. ½ மணி நேரம் பலத்த மழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் புது தெரு, வேணுகோபால் தெரு, சபாநாயகர் தெரு, காசி மட தெரு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடியே சென்றதை காணமுடிந்தது.
அதுபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
மழை அளவு
மாவட்டத்தில் அதிகபட்சமாக விருத்தாசலத்தில் 73 மி.மீட்டரும், ஸ்ரீமுஷ்ணம் 42, குப்பநத்தம் 25, வடக்குத்து 18, கீழ்செருவாய் 16, பண்ருட்டி 16, பரங்கிப்பேட்டை 12, சேத்தியாத்தோப்பு 11, காட்டுமன்னார்கோவில் 7, லால்பேட்டை 6, குறிஞ்சிப்பாடி 4, சிதம்பரம், பெலாந்துறை தலா 2, குறைந்தபட்சமாக புவனகிரியில் 1 மி.மீட்டரும் மழை பதிவானது.
5 மாடுகள் செத்தன
நெய்வேலி அருகே கொள்ளிருப்பு ஊராட்சிக்குட்பட்ட நைனார்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 61). என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் 4 பசுமாடுகள், ஒரு காளை மாடு வளர்த்து வந்தார். இதனை நேற்று முன்தினம் கொட்டகையில் கட்டினார். சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதால் 5 மாடுகளும் சுருண்டு விழுந்து செத்தன.