திருவேற்காட்டில் ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


திருவேற்காட்டில் ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x

திருவேற்காட்டில் ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.

சென்னை

பூந்தமல்லி,

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சுந்தர சோழபுரம் பகுதியில் தாழங்குளம் என்ற இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அரசுக்கு சொந்தமான அந்த இடம் தனியார் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது வருவாய் துறை மூலம் கண்டறியப்பட்டது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மழைக்காலத்துக்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தாழங்குளத்தில் அப்பகுதி மழை நீரை கொண்டு விட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து நேற்று திருவேற்காடு போலீசார் பாதுகாப்புடன் நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர்பாஷா தலைமையில் பூந்தமல்லி தாசில்தார் மாலினி முன்னிலையில் வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டி இருந்த 11 வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றி 50 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Next Story