சீட்டு கம்பெனி நடத்தி ரூ.5 கோடி மோசடி
கோவையில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கோவை
கோவையில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
முற்றுகை
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை சிலர் திடீரென முற்றுகையிட்டனர். தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் வேலு(வயது 53) தனது மனைவி, மகன் உள்பட 6 பேருடன் சேர்ந்து ஸ்ரீ அம்மன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி வந்தார். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் டெபாசிட் மூலமும், ஏலச்சீட்டு என்ற பெயரிலும் லட்சக்கணக்கில் முதலீடு பெற்றனர்.
மோசடி
ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என்று முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வடைந்த தொகையை கொடுக்காமலும், முதலீடு செய்த தொகையை திரும்ப கொடுக்காமலும் சீட்டு கம்பெனியை மூடி விட்டு சரவணகுமார் வேலு மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில் சுமார் 175 பேரிடம் ரூ.5 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.