சுயதொழில் தொடங்க ரூ.5 கோடி கடன்
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு திட்டங்களில் ரூ.5 கோடி கடன் உதவி வழங்கப்பட உள்ளதாகவும், இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர்:
தமிழக அரசு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு மானியத்துடன் வங்கி கடன் பெற்று சுயதொழில் தொடங்க படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற 3 சுயதொழில் திட்டங்களை அறிவித்துள்ளது.
மேலும், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ஒழுங்குப்படுத்தும் திட்டங்களை தமிழக அரசு மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தவிர பல்வேறு விதமான மானிய உதவிகளும் மாவட்ட தொழில் மையத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.5 கோடி கடன் உதவி
இந்த சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூ.5 கோடி வரையிலான வங்கி கடனுதவி அதிகபட்சமாக 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்து தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் வங்கி கடன் பெற்று பயனடையும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இதன்படி வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், மாலை 3 மணிக்கு குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு காட்டுமன்னார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், மாலை 3 மணிக்கு குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 18-ந்தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், மாலை 3 மணிக்கு புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 25-ந்தேதி மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், மாலை 3 மணிக்கு நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது.
வங்கிகளுக்கு பரிந்துரை
கூட்டத்திற்கு ஆவணங்கள் அசல் மற்றும் 2 நகல்கள் எடுத்து வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கல்வித்தகுதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ், விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் வங்கிகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும்.கூட்டத்தில் திட்ட விளக்கவுரை மற்றும் அனைத்து திட்டங்களின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பான விளக்கமும், கூட்டம் நடைபெறும் இடத்திலேயே விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்படுகிறது. ஆகவே மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.