பெரம்பலூரில் ஜாக்டோ-ஜியோவினர் 5-ந்தேதி உண்ணாவிரதம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் ஜாக்டோ-ஜியோவினர் 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வாழ்வாதார உரிமை மீட்பு மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் நேற்று நடந்தது. இதற்கு தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவரும், ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான மகேந்திரன் மற்றும் அனைத்து சங்க பொறுப்பாளர்களும், அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள், பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். மாநாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூரில் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரத போராட்டம் வருகிற 5-ந்தேதி நடைபெறும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.