ஒரேநாளில் 5 அரசு பஸ்கள் ஜப்தி
ஒரேநாளில் 5 அரசு பஸ்கள் ஜப்தி
விபத்தில் உயிரிழப்பு
திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 55). இவர் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வந்தார். கடந்த 13-6-2012 அன்று அனுப்பர்பாளையத்தில் நடந்து சென்றபோது அரசு பஸ் மோதி இறந்தார். அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் திருப்பூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். வீரம்மாள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்து 54 ஆயிரத்து 44 இழப்பீட்டை அரசு போக்குவரத்து கழகம் வழங்க 1-12-2021 அன்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதுவரை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.
இதுபோல் திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் கஸ்தூரி (24). பனியன் நிறுவன டெய்லர். இவர் கடந்த 21-1-2019 அன்று தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் கள்ளிமந்தையம் அருகே சென்றபோது அரசு பஸ் மோதி கஸ்தூரி பலியானார். அவருக்கு இழப்பீடு கேட்டு திருப்பூர் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தனர். கடந்த 16-9-2022 அன்று ரூ.19 லட்சத்து 79 ஆயிரத்து 400 இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.
அரசு பஸ்கள் ஜப்தி
திருப்பூர் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் ராஜா (42). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 10-5-2019 அன்று தண்ணீர்பந்தலில் நடந்து சென்றபோது அரசு பஸ் மோதி பலியானார். அவருக்கு இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். கடந்த 18-7-2022 அன்று ரூ.17 லட்சத்து 84 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதுவரை இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
திருப்பூர் காலேஜ் ரோடு ஜீவாநகரை சேர்ந்தவர் கணேசன் (20). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 11-4-2012 அன்று மோட்டார் சைக்கிளில் பொள்ளிகாளிபாளையம் அருகே சென்றபோது அரசு பஸ் மோதி பலியானார். அவருக்கு இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் திருப்பூர் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த 31-7-2013 அன்று ரூ.9 லட்சத்து 73 ஆயிரத்து 600 வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதுவரை வழங்காததால் கோர்ட்டு உத்தரவுப்படி அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
மாணவி படுகாயம்
சோமனூர் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்து (18). கல்லூரி மாணவி. இவர் கடந்த 7-12-2015 அன்று காரில் சூலூருக்கு சென்றபோது அரசு பஸ் மோதியதில் காயமடைந்து சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். விபத்து நஷ்ட ஈடு கேட்டு அவர் திருப்பூர் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். கடந்த 26-9-2022 அன்று ரூ.7 லட்சத்து 9 ஆயிரத்து 291 வழங்க கோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி அரசு பஸ்சை நேற்று ஜப்தி செய்தனர். மேற்கண்ட 5 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல் பழனிசாமி ஆஜராகி வாதாடினார்.