கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 5 பேர் காயம்


கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 5 பேர் காயம்
x

தஞ்சையில், கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் 5 பேர் காயம் அடைந்தனர். 8 பேர் கைது செய்யப்பட்டதால் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சையில், கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் 5 பேர் காயம் அடைந்தனர். 8 பேர் கைது செய்யப்பட்டதால் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் முத்துகண் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு அம்மன் வீதிஉலா நடந்தது.

இந்த வீதிஉலா நடந்தபோது நேற்று அதிகாலையில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதால் கோஷ்டி மோதல் ஏற்பட்டு கற்களால் ஒருவரையொருவர் தாக்கினர்.

5 பேர் காயம்

இந்த தாக்குதலில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. 2 பெண்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசில் புகார்

இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் ஏராளமான போலீசார் பிள்ளையார்பட்டியில் குவிக்கப்பட்டனர்.

இது குறித்து இரண்டு சமூகத்தினரும் தனித்தனியாக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

8 பேர் கைது

அதன்பேரில் ஒரு சமூகத்தை சேர்ந்த 6 பேர் மீதும், மற்றொரு சமூகத்தை சேர்ந்த 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஒரு சமூகத்தினர் அளித்த புகாரின்பேரில் பிள்ளையார்பட்டி வடக்குதெருவை சேர்ந்த சுதாகர் மகன்கள் அபினாஷ்(வயது 22), ஆகாஷ்(20), சதாசிவம் மகன் சச்சின்(23), சந்திரராஜ் மகன் விக்கி என்கிற விக்ரம்(22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு சமூகத்தினர் அளித்த புகாரின்பேரில் வடக்கு நாயக்கன் தெருவை சேர்ந்த தனபால் மகன் மணிகண்டன்(32), நாகராஜ் மகன் கோகுலகிருஷ்ணன்(22), கோவிந்தராஜ் மகன் மாரிமுத்து(28), தனபால் மகன் மகேஸ்வரன்(29) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த நிலையில் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் தலைமையில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களும் நேற்று இரவு தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள், நாங்கள் சமாதானமாக செல்கிறோம். வழக்குகள் வேண்டாம் என கூறினர். ஆனால் வழக்குப்பதிவு செய்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இருந்தாலும் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களும் கலைந்து செல்லாமல் திரண்டு நின்றதால் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீஸ்வரன், ஸ்ரீதர், சந்திரா, பிராங்கிளின் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இரு சமூகத்தினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீசார் வேனில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இவர்கள் 8 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story