2 தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதல்: டிரைவர் உள்பட 5 பேர் பலி, 91 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதி


தினத்தந்தி 20 Jun 2023 12:15 AM IST (Updated: 20 Jun 2023 7:38 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே 2 தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் உள்பட 5 பேர் பலியானார்கள். 91 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி மற்றொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சை நெல்லிக்குப்பம் மோரை எவரெஸ்ட்புரத்தை சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் அங்காளமணி (வயது 36) என்பவர் ஓட்டினார்.

காலை நேரம் என்பதால் 2 தனியார் பஸ்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

கடலூர் அருகே மேல்பட்டாம்பாக்கம் நாராயணபுரம் மெயின்ரோட்டில் வந்த போது, பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த பஸ்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

உடனே டிரைவர் அங்காளமணி சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பஸ் அவரது கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது.

நேருக்குநேர் மோதல்

இதை சற்று தொலைவில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் கவனித்தார். அவர் தனது பஸ்சை ஓரமாக நிறுத்துவதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் இரு பஸ்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. அப்போது பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து 2 பஸ்களிலும் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். விபத்தில் 2 பஸ்களின் முன்பக்கமும் உருக்குலைந்தது.

பஸ்சில் இருந்த பயணிகளும், டிரைவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். இதை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

5 பேர் பலி

இதுதவிர கடலூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களையும், படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி தனியார் பஸ் டிரைவர் அங்காளமணி, பண்ருட்டி சேமக்கோட்டை சண்முகம் மகன் சீனிவாசன் (49), திருவெண்ணெய்நல்லூர் காந்திக்குப்பம் குப்பன் மகன் முருகன் (50), பண்ருட்டி மேல்கவரப்பட்டு தனபால் (60), பண்டரக்கோட்டை நடராஜன் (83) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

91 பேர் காயம்

படுகாயமடைந்த மேல்குமாரமங்கலம் பரசுராமன் மனைவி மலர்விழி (33), திண்டிவனம் உப்புளி நடனஜோதி மனைவி பூமா (49), பண்ருட்டி தங்கஜோதி மகள் சத்யா (25), வானமாதேவி தண்டபாணி மகள் ஜெயப்பிரியா (26), பிரனதிஸ்ரீ, புலவனூர் வீரராகவன் (53), அங்குசெட்டிப்பாளையம் ஏழுமலை மனைவி வசந்தா (60), புதுப்பேட்டை பூமாலை மனைவி சசிகலா (34), திருவதிகை கோபால் (57), எனதிரிமங்கலம் சதீஷ் (34), கீழிருப்பு சிவசக்தி வடிவேல் (42), திருவண்ணாமலை விமல்ராஜ் (38), ஏரிப்பாளையம் தண்டபாணி (60), ஞானகுப்பம் ஆறுமுகம் மனைவி அருண்மொழி (36) , ஒரு கைக்குழந்தை உள்பட 91 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னதாக பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மீட்பு பணியையும் துரிதப்படுத்தினார்.

அமைச்சர்கள் ஆறுதல்

இதற்கிடையே தகவல் அறிந்ததும் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழக தொழில்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் விஜய் ஆனந்த் ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர். தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் இறந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தலா ரூ.2 லட்சம் நிதியை வழங்கினர்.

இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் கடலூர்-பண்ருட்டி சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இருப்பினும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story