ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள், சாராயம் பறிமுதல்


ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள், சாராயம் பறிமுதல்
x

காரைக்காலில் இருந்து நாகைக்கு கார், மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 5 வாலிபர்களை கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

காரைக்காலில் இருந்து நாகைக்கு கார், மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 5 வாலிபர்களை கைது செய்தனர்.

வாகன சோதனை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து நாகை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சாராயம், மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தது. சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று தனிப்படை போலீசார் மாவட்ட எல்லை பகுதிகளான திட்டச்சேரி, கங்களாச்சேரி, நாகூர் ஆகிய 3 சாலைகளிலும் தடுப்பு அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள், சாராயம்

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரையும், அதன் முன்னால் வந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 300-ம், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களிடம் இருந்த சாக்கு மூட்டைகளில் 500 லிட்டர் புதுச்சேரி சாராயமும் இருந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த ஒருவரையும், மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த 4 பேரையும் நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

5 பேர் கைது

விசாரணையில் அவர்கள், கீழ்வேளூர் கடம்பனூரை சேர்ந்த வினோத் (வயது 24), ஒரத்தூரை சேர்ந்த விஷ்வா(21), கபிலரசன்(20), வெளிப்பாளையத்தை சேர்ந்த அஜித்(23), செல்லூரை சேர்ந்த ஆனந்தராஜ்(31) ஆகியோர் என்பதும். இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து நாகைக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சாராயம், மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

போலீசாருக்கு பாராட்டு

குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.


Next Story