குப்பைகள் அள்ள டிராக்டருக்கு ரூ.5 லட்சம் வாடகையா?


குப்பைகள் அள்ள டிராக்டருக்கு ரூ.5 லட்சம் வாடகையா?
x

ரூ.6 லட்சத்தில் புதிய டிராக்டரே வாங்கிவிடலாம் என்ற நிலையில் 3 மாதத்துக்கு குப்பைகள் அள்ள டிராக்டருக்கு ரூ.5 லட்சம் வாடகையா?, என்று ஆரணி நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

திருவண்ணாமலை

ஆரணி

ரூ.6 லட்சத்தில் புதிய டிராக்டரே வாங்கிவிடலாம் என்ற நிலையில் 3 மாதத்துக்கு குப்பைகள் அள்ள டிராக்டருக்கு ரூ.5 லட்சம் வாடகையா?, என்று ஆரணி நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

நகரமன்ற கூட்டம்

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நடந்தது. நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார். ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி வரவேற்றார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் ஆணையாளர், தான் திண்டிவனம் நகராட்சிக்கு பதவி உயர்வு பெற்று மாறுதலாகி செல்ல இருப்பதால் கூட்டத்தை விரைந்து முடியுங்கள் என்று கோரிக்கை விடுத்து பேசினார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

சுப்பிரமணி (தி.மு.க.):- பொது சுகாதார பிரிவில் குப்பைகளை அள்ள வாகன பற்றாக்குறை உள்ளதால் தனியார் டிராக்டர் மூலம் குப்பைகளை அள்ள விலை புள்ளி கோரியதில் நாள் 1-க்கு டீசல், வாடகை, டிரைவர் படி உள்பட ரூ.6 ஆயிரம் என விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

டிராக்டர் வாடகைக்காக 3 மாத காலத்திற்கு ரூ.5 லட்சத்து 22 ஆயிரம் செலவு செய்ததாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய டிராக்டரின் விலையே ரூ.6 லட்சம் தான். டிரில்லருடன் ரூ.7 லட்சம் தான் ஆகிறது இதற்கு ஏன் வாடகைக்கு எடுத்து 3 மாதத்திற்கு செலவு செய்ய வேண்டும்.

ஆணையாளர்:- குப்பை ஆங்காங்கே இருப்பதால் வாடகை எடுத்து செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.

வெள்ளை அறிக்கை

ஆர்.எஸ்.பாபு (தி.மு.க.):- 11-வது தீர்மானத்தில் ஓராண்டுக்கு ஆரணி நகரில் குப்பைகளை அள்ள ரூ.3 கோடியே 77 லட்சத்து 89 ஆயிரம் கணக்கீடு செய்யப்பட்டு தனியாருக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது அதன் முழு விவரம் யாருக்கும் தெரியாது. எனவே, அதன் விளக்கம் தர வேண்டும். பணியாளர்களை நியமனம் செய்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்தாலே இவ்வளவு தொகை செலவாகாது.

ஆணையாளர்:- ஒரு நாள் குப்பைகள் கழிவு 21.46 டன் ஆகும். அதன் விவரத்தில் ஒரு நாளுக்கு 87 ஆயிரம் ரூபாய் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாபு:- எதன் அடிப்படையில் இந்த தொகையினை தேர்வு செய்தீர்கள் என்ற முழு விவரத்தையும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவலாக தர வேண்டும்.

ஆ.நடராஜன் (அ.தி.மு.க.):- மன்ற கூட்டத்தில் செலவுகள் மட்டுமே காட்டப்படுகிறீர்கள், ஒவ்வொரு வார்டின் சொத்து வரி வசூல் எவ்வளவு, நிலுவை எவ்வளவு பாக்கியுள்ளது என்ற விவரங்கள் இல்லை. செலவு மட்டும் இவ்வளவு என்றால், வரவு எவ்வளவு வருகிறது என்ற விவரத்தை வெள்ளை அறிக்கையாக தர வேண்டும்.

ஆணையாளர்:- அனைத்து தகவல்களையும் அனைவருக்கும் தர சொல்கிறேன்.

தெருவிளக்குகள்

சுப்பிரமணி (தி.மு.க.):- மினி ஆட்டோக்கள் பழுது நீக்கம் செய்யவும் அதற்காக செலவு ஒவ்வொரு ஆட்டோவுக்கும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் வீதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. எத்தனை வண்டி பழுதடைந்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

தலைவர்:- உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். விவாதம் செய்து பேசாதீர்கள்.

தீக்குளித்து கொள்வேன் என பேசிய அதிகாரியால் பரபரப்பு

கூட்டத்தில் ஏ.ஜி.மோகன் (அ.தி.மு.க.) பேசுகையில், விரிவாக்கப் பகுதிகளுக்கு புதிய மின் கம்பம் பொருத்தி தெரு விளக்குகள் பராமரிக்கப்பட வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மின்வாரியத்தில் கேட்டால், ஆரணி நகராட்சியில் ரூ.4 கோடி பாக்கி இருப்பதாக கூறுகின்றனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தெருவிளக்குகள் புதிதாக வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு இதுவரை புதிய விளக்குகள் வரவில்லை. இதனால் பல பகுதிகளில் இருளில் உள்ளது. இதுகுறித்து பொறியாளர் பிரிவில் எந்த பதிலும் அளிப்பதில்லை என்றார்.

இதற்கு பதில் அளித்து பொறியாளர் டி.ராஜவிஜய காமராஜ் பேசுகையில், ஆரணி நகராட்சியில் 1½ ஆண்டு காலமாக தண்டத்துக்கு வேலை செய்கிறேன்.

நான் கொடுக்கும் தகவல்களை ஆணையாளர் செவி சாய்த்து அதனை நடைமுறைப்படுத்துவது இல்லை. தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருக்கும் சேவூர் ராமச்சந்திரன் அமைச்சராக இருக்கும்போது சூரிய குளத்திற்கு சுற்றுச்சூழல் துறை மூலமாக ரூ.6 கோடி 50 லட்சம் நிதி பெற்று தந்தார். அதில் பணிகள் நடைபெற்றன.

அப்போது கொரோனா காலம் என்பதால் சென்னை அலுவலகத்தில் இருந்து ரூ.1 கோடியை 3 மாத சம்பளத்தையும் தீபாவளி போனஸ் வழங்கவும் இந்த தொகையிலிருந்து மாற்றம் செய் என பதில் அளித்தார்கள்.

அதன் அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள ஆணையாளர் எந்த பணிக்கும் நான் பொறுப்பல்ல,

ஒப்பந்ததாரரை அழைத்து பொறியாளரை கேட்டு பணத்தை பெறுங்கள் என கூறி வருகிறார். அந்த டெண்டரையும் ரத்து செய்துள்ளார். இதனால் நான் மன உளைச்சலில் இருக்கிறேன். மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து கொள்வேன்.

இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

கூட்டம் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி பேசினார்கள்.

1 More update

Related Tags :
Next Story