கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
11 ஆயிரம் போலீசார்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகாதீபம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து தேரடி வீதியிலும், அருணாசலேஸ்வரர் கோவில் உட்புறத்திலும் சோதனை நடத்தினர்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-
3-ந்தேதி (சனிக்கிழமை) மாட வீதியில் வலம் வரஉள்ள மகாரதம் தினத்தன்று 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து வருகிற 6-ந்தேதி மகா தீபத்தன்று தமிழகம் முழுவதிலும் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
திருவண்ணாமலை நகரத்திற்கு உள்ளே வர உள்ள 9 சாலைகளில் 13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்காக அந்த இடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றது.
5 அடுக்கு பாதுகாப்பு
மகா தீபத்தன்று திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 20 ஆயிரம் வ்ரெஸ்ட் பேண்ட் (மணிகட்டு பட்டை) கொடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகள் தொலைந்து போனால் எளிதில் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும்.
தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதி, நகரப்பகுதி, புறவழிச்சாலை, மாவட்ட எல்லை என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதில் வாகன தணிக்கை, பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு 15 குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திருவண்ணாமலையில் தங்கி உள்ள வெளி நாட்டினர் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது.
திருவண்ணாமலை நகரத்திற்குள் ஆன்லைன் மூலம் 12 ஆயிரம் கார்கள் பார்க்கிங் செய்ய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 6-ந்தேதி அதிகாலை பரணி தீபம் முடிந்த பிறகு காலை 7 மணி முதல் 10 மணி வரை தேவைக்கு ஏற்ப பொது தரிசனத்திற்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.