திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி (வயது 25). இவருக்கும், தியாகராயநகரைச் சேர்ந்த குமரன் (37) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமான நாள் முதலே இந்துமதியை அவரது மாமியார் சாந்தி திட்டி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்துமதி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனாலும் மாமியாரின் துன்புறுத்தல் காரணமாக கடந்த 1½ மாதத்துக்கு முன்பு வேளச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
ஆனால் இந்துமதியை சமாதானம் செய்து அழைத்துச்செல்ல கணவரும், அவரது குடும்பத்தினரும் வரவில்லையே என்ற விரக்தியில் இந்துமதி இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அக்காவின் செல்போனுக்கு "எனது சாவுக்கு மாமியார்தான் காரணம். நானும், பாப்பாவும் செல்கிறோம்" என 'வாட்ஸ்அப்'பில் ஆடியோ பதிவு செய்து அனுப்பி வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
'வாட்ஸ்அப்'பில் வந்த தங்கையின் ஆடியோவை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது அக்கா, வீட்டுக்கு வந்து பார்த்தபோது, இந்துமதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த வேளச்சேரி போலீசார் இந்துமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இது குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்துமதிக்கு திருமணம் ஆகி 5 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.