5 மாத கர்ப்பிணி தீக்குளிப்பு
5 மாத கர்ப்பிணி தீக்குளித்தார்.
கர்ப்பிணி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு காலனி தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி வசந்தா, மகன் விஜய் பிரகாஷ். கூலி தொழிலாளியான விஜய் பிரகாசுக்கு திருமணமாகி அபிராமி(வயது 21) என்ற மனைவியும், 1½ வயதில் அகிலேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். தற்போது அபிராமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை விஜய்பிரகாஷ் வீட்டிற்கு கோழி இறைச்சி வாங்கி வந்தார். அதனை அபிராமி சமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது குழந்தை அகிலேஷ் தண்ணீரில் விளையாடி கொண்டு இருந்ததை கண்ட அபிராமி, குழந்தையை அடித்ததாக தெரிகிறது.
தீக்குளித்தார்
இதையடுத்து கலியமூர்த்தியும், வசந்தாவும் அபிராமியை திட்டி, குழந்தையை ஏன் அடித்தாய்? என்று கண்டித்ததாக தெரிகிறது. இது பற்றி விஜய்பிரகாஷிடம் அபிராமி கூறியுள்ளார். அப்போது அவர், தனது பெற்றோருக்கு ஆதரவாக பேசி அபிராமியை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அபிராமி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர்.
தீவிர சிகிச்சை
இதையடுத்து அபிராமி உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்ப்பிணி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.