திருச்சியில் துணை தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது


திருச்சியில் துணை தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது
x

திருச்சியில் துணை தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சியில் துணை தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

துணை தாசில்தார் மீது தாக்குதல்

திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் சார்பில் அரசுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் கடன் வாங்கி இருந்தனர். ஆனால் கடன்தொகையை உரிய நேரத்தில் திரும்ப செலுத்தாததால் அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்ய கலெக்டர் உத்தரவின்பேரில், துணை தாசில்தார் பிரேம்குமார் தலைமையில் வங்கி அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஜாமலை பகுதியில் உள்ள அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் வீட்டை ஜப்தி செய்ய சென்றனர்.

அப்போது ஒரு கும்பல் துணை தாசில்தார் பிரேம்குமார் மற்றும் வங்கி அதிகாரிகளை சரமாரியாக தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த பிரேம்குமார் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

5 பேர் கைது

இதற்கிடையே துணை தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த வருவாய்த்துறை சங்கத்தினர் அலுவலக பணியை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2 நாட்களாக போராட்டம் நடத்திய அவர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் துணை தாசில்தாரை தாக்கியதாக கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த தேவஆசீர்வாதம், காஜாமலையை சேர்ந்த சுப்பிரமணி, ரெங்கநாதன் உள்ளிட்டோரை ஏற்கனவே கைது செய்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் காஜாமலை பகுதியை சேர்ந்த அசன், சையத்ஜாகீர்உசேன், ஷேக்மொய்தீன், காட்டூரை சேர்ந்த முத்துப்பாண்டி, மாடசாமி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story