நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மாணவன் உள்பட 5 பேர் கைது


எருமப்பட்டி அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மாணவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

எருமப்பட்டி

நிதி நிறுவன ஊழியர் கொலை

எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மண் கரடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சசிகுமார் (வயது 27). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் நிதி வசூல் செய்யும் வேலை செய்து வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்றுமுன்தினம் சசிகுமார் மண் கரட்டில் இருந்து அலங்காநத்தம் செல்லும் சாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது அந்த பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சசிகுமாரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சசிகுமார் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

2 தனிப்படைகள்

இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதி, மதன்குமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சசிகுமாரை கொலை செய்தது மண் கரடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் தினேஷ், நித்திஷ் (23), விக்கி (21), சீனிவாசன் (33) மற்றும் 17 வயதுடைய 12-ம் வகுப்பு மாணவன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல்

விசாரணையில், தினேசும், சசிகுமாரும் நண்பர்கள். மேலும் தினேஷ் குடும்பத்தாருக்கும், சசிகுமாரின் தாத்தா பிச்சைக்காரன் குடும்பத்தாருக்கும் வீடு தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட அடிதடி தகராறில் தினேஷ் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சசிகுமார் அதில் சாட்சியாக சேர்க்கப்பட்ட நிலையில் கோர்ட்டுக்கு வராமல் வழக்கை காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் சசிகுமார் மீது தினேசுக்கு கோபம் ஏற்பட்டது.

இதேபோல் அதேபகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (33) மனைவி ரூபினி என்பவருக்கும், சசிகுமாருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைதெரிந்து கொண்ட சீனிவாசன் நாமக்கல்லுக்கு குடி பெயர்ந்ததாகவும், அப்போதும் ரூபினியும், சசிகுமாரும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 2019-ம் ஆண்டு ரூபினி விவாகரத்து பெற்றுக்கொண்டு அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதனால் குடும்பம் பிரிய காரணமாக இருந்த சசிகுமாரை பழிவாங்க வேண்டும் என சீனிவாசன், தினேஷிடம் கூறியதாக தொிகிறது. இதையடுத்து சசிகுமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இந்தநிலையில் சம்பவத்தன்று தினேஷ் மது அருந்தலாம் வா என சசிகுமாரை அழைத்திருக்கிறார். பின்னர் 2 பேரும் மது அருந்தினர். அப்போது சசிகுமாருக்கு போதை அதிகமானதை தெரிந்துகொண்ட தினேஷ் மாணவன் உள்பட 4 பேர் உதவியுடன் கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் துடிதுடித்து அவர் இறந்து விட்டார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

5 பேர் கைது

பின்னர் கைது செய்யப்பட்ட தினேஷ், விக்கி, நித்திஷ், சீனிவாசன் மற்றும் 17 வயது மாணவன் உள்பட 5 பேரை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


Next Story