ஓட்டல் ஊழியர்களை தாக்கிய 5 பேர் கைது


ஓட்டல் ஊழியர்களை தாக்கிய 5 பேர் கைது
x

ஓட்டல் ஊழியர்களை தாக்கிய 5 பேர் கைது

கோயம்புத்தூர்

காரமடை

காரமடையில் தந்தை பெரியார் ஓட்டல் ஊழியர்களை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தந்தை பெரியார் பெயரில் ஓட்டல்

கோவையை அடுத்த காரமடை அருகே கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில் பிரபாகரன் (வயது 54) என்பவர் தந்தை பெரியார் பெயரில் ஓட்டல் ஒன்றை கட்டியுள்ளார். இதன் திறப்பு விழாவுக்காக நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் நாகராணி (வயது 38). இவரது மகன் அருண் (வயது 20) வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சிக்காரம்பாளையம் காளட்டியூரை சேர்ந்த ரவிபாரதி (39), காரமடை காந்தி மைதானம் பகுதியை சேர்ந்த பிரபு (27), தொட்டிபாளையத்தை சேர்ந்த சுனில் என்ற சதீஷ்குமார் (32), பெரிய வடவள்ளியை சேர்ந்த சரவணக்குமார் (30), மங்களகரை புதூரை சேர்ந்த விஜயகுமார் (26) உள்பட 7 பேர் கும்பல் அங்கு வந்தனர். திடீரென அவர்கள் ஓட்டலுக்குள் புகுந்து இது இந்து அமைப்புக்களுக்கான பகுதி, இங்கு எப்படி தந்தை பெரியால் பெயரில் உணவகம் திறக்கலாம் என்று கூறி அங்கிருந்து ஓட்டல் ஊழியர்களான நாகராணி, அருண் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

5 பேர் கைது

இதில் பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கண்ணார்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஓட்டல் ஊழியர்களை தாக்கியதாக ரவிபாரதி, பிரபு, சதீஷ்குமார், சரவணக்குமார், விஜயகுமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story