அதிக வட்டி வசூலித்த 5 பேர் கைது
அதிக வட்டி வசூலித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையத்தை சேர்ந்தவர் பாலதண்டபாணி (வயது 34). இவர் பேக்கரி வைத்து நடத்தி வருகின்றார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் தனது தொழிலுக்காக ஜோதி நகரை சேர்ந்த திருசிற்றம்பலம் (56) என்பவரிடம் ரூ.4 லட்சம் கடனாக பெற்றதாக தெரிகிறது. இதற்கிடையில் பாலதண்டபாணியிடம் இருந்து வங்கி காசோலை உள்ளிட்ட ஆவணங்களை திருசிற்றம்பலம் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அசல் தொகைக்கு மேல் பணம் செலுத்தியும் ஆவணங்களை திருசிற்றம்பலம் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருசிற்றம்பலத்தை கைது செய்தனர்.
பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் செல்வக்குமார் (51). இவர் தனது குடும்ப சூழ்நிலைக்காக ஜோதி நகரை சேர்ந்த சுபாஷ்குமார் என்பவரிடம் ஆவணங்களை கொடுத்து ரூ.20 ஆயிரம் கடன் பெற்றதாக தெரிகிறது. இந்த நிலையில் வட்டியுடன் சேர்த்து கடன் தொகைக்கு மேல் செலுத்திய பிறகு ஆவணங்களை கேட்டதற்கு மேலும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுபாஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் அலுவலகங்களில் போலீசார் நேற்று சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கிணத்துக்கடவு பகுதியில் அதிக வட்டி வசூலித்ததாக அரிசி கடை உரிமையாளர் உதயகுமார் (62), பெரியார் நகர் முதல் வீதியைச் சேர்ந்த விவசாயி சவுந்தர்ராஜன் (61), வடசித்தூரை சேர்ந்த வேலுச்சாமி ஆகியோரை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்தனர்.