சந்தன மரம் வெட்டிய 5 பேர் சிக்கினர்
கோத்தகிரி அருகே சந்தன மரம் வெட்டிய 5 பேர் வனத்துறை யினரிடம் சிக்கினர்.
ஊட்டி
கோத்தகிரி அருகே சந்தன மரம் வெட்டிய 5 பேர் வனத்துறை யினரிடம் சிக்கினர்.
மர்ம நபர்கள் நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெட்டு வனச்சரகத்துக்கு உட்பட்ட கூக்கல்தொரை, கம்பட்டிக்கம்பை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் வனச்சரகர் செல்வக்குமார் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சந்தன மரம்
அப்போது கூக்கல்தொரையில் இருந்து கம்பட்டிக்கம்பை செல்லும் சாலையில் தனியார் பட்டா நிலத்தில் இருந்த சந்தன மரத்தை 3 மர்ம நபர்கள் வெட்டி துண்டுகளாக்கி கொண்டு இருப்பது தெரியவந்தது. அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும், சந்தன மர துண்டுகளை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர். எனினும் அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
கைது
விசாரணையில் அவர்கள், குஞ்சப்பணை பகுதியை சேர்ந்த பால்ராஜ், சவுந்திரபாண்டியன், செல்வன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு கூக்கல்தொரை பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சந்தன மரத்தை அடையாளம் காட்டியதும், வெட்டப்பட்ட சந்தன மரத்தை வாங்குவதற்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் தயாராக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சந்தன மர துண்டுகள் மற்றும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது.