தீயணைப்பு படை வீரர் உள்பட 5 பேர் கைது
விருதுநகரில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை பறித்த தீயணைப்பு படை வீரர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகரில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை பறித்த தீயணைப்பு படை வீரர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பு
விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 73). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் இருசக்கர வாகனத்தில் லட்சுமி நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஒருசொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் கந்தசாமி வீட்டு முன்பு இறங்கிய போது அவர் கழுத்தில் கடந்த 16 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். மர்மநபர்கள் வந்த சொகுசு காரின் பதிவு எண்கள், ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டிருந்தது எனினும் கார் சென்ற வழியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
தீயணைப்பு வீரர்
அப்போது ஒரு இடத்தில் காரில் அந்த காரை வாடகைக்கு விட்ட டிராவல்ஸ் நிறுவனத்தின் பெயர் இருந்தது. இதனைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தில் போலீசார் சென்று விசாரித்த போது காரை விருதுநகர் தீயணைப்புதுறையில் தீயணைப்பு வீரராக பணியாற்றும் திருப்பதி (36) என்பவர் வாடகைக்கு எடுத்தது தெரிய வந்தது.
திருப்பதி தீயணைப்புத்துறை குடியிருப்பில் வசித்து வருகிறார். ஏற்கனவே இவர் தொழில் நிறுவனங்களுக்கும், பள்ளிகளுக்கும் தீயணைப்பு அதிகாரியின் போலி கையெழுத்திட்டு தடையில்லா சான்று வழங்கியதாக எழுந்த புகாரின் பேரில் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இவர் விருதுநகர் சத்திரரெட்டிபட்டியில் மினரல் வாட்டர் நிறுவனமும் நடத்தி வருகிறார். இதனையடுத்து திருப்பதியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொள்ளை சம்பவத்தை அவரே திட்டமிட்டு அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டார்.
5 பேர் கைது
மேலும் கந்தசாமி எப்போதும் அதிக தங்க நகைகள் அணிந்து கொண்டு வலம் வருவதை கண்ட திருப்பதி அவர் இருசக்கர வாகனத்தில் செல்வதை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டதாக தெரிவித்தார். சம்பவத்தன்று விருதுநகரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் சொகுசு காரை வாடகைக்கு எடுத்து கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தியுள்ளதும், இந்த சம்பவத்தில் திருப்பதியின் மினரல் வாட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் விருதுநகர் ஆனைக்குழாய் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (31), அவரது நண்பர்கள் சிவகாசியை சேர்ந்த அழகர் (29), காளீஸ்வரன் (28), விருதுநகர் மேலத் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (31), விருதுநகர் அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த கருப்பு ஆகிய 6 பேர் ஈடுபட்டதும் உறுதியானது. இதையடுத்து திருப்பதி, கிருஷ்ணமூர்த்தி, சதீஷ்குமார், அழகர், காளீஸ்வரன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான கருப்பு என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பின்னர் 16 பவுன் நகையை திருப்பதியிடமிருந்து மீட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.