திருட்டு போன 46 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு; என்ஜினீயர் உள்பட 5 பேர் கைது
காரைக்குடி பகுதியில் திருட்டு போன 46 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக என்ஜினீயர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி
காரைக்குடி பகுதியில் திருட்டு போன 46 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக என்ஜினீயர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன திருட்டு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சாக்கோட்டை. புதுவயல் பகுதிகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள் சந்தை ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து நடைபெற்றது. இது குறித்த புகார்களின் பேரில் காரைக்குடி உதவி சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து, உதயகுமார் ஆகியோர் தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் திருட்டு சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள 70 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் கிடைத்த பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட போது புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (வயது 40) என்பவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையிலிருந்து சமீபத்தில் வெளிவந்த நபர் என தெரியவந்தது.
46 மோட்டார் சைக்கிள் மீட்பு
இதற்கிடையே தனிப்படை போலீசார் கண்ணனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தலைமையில் மேலும் 4 பேர் காரைக்குடி, சாக்கோட்டை, புதுவயல், சாக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை பகுதிகளில் 46 இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அவற்றை குறைந்த விலையில் விற்றும் அடகு வைத்து பணம் பெற்றும் உல்லாசமாக செலவழித்து உள்ளனர்.
கண்ணன் கொடுத்த தகவலின் பேரில் அவரையும், அவரது கூட்டாளிகள் கீரமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 40), மாரிமுத்து (40), சுந்தர் (29) விஜய், (29) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 46 இருசக்கர வாகனங்களை மீட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.