சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது
சிவகாசி அருகே விவசாயி கொலை வழக்கில் சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது ெசய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே விவசாயி கொலை வழக்கில் சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது ெசய்யப்பட்டுள்ளனர்.
விவசாயி
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முருகேஸ்வரன் (வயது 30). விவசாயி. இந்தநிலையில் சொத்து பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரது தம்பிகள் விநாயகமூர்த்தி (25), மணிகண்டன் (29), அண்ணன் முத்தீஸ்வரன் (40) மற்றும் சிறுவர்கள் 2 பேர் முருகேஸ்வரனின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து அரிவாளால் முருகேஸ்வரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் முருகேஸ்வரனின் மனைவி இந்திராதேவி, மாமியார் பெரியதாய் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
5 பேர் கைது
இந்த கொலை சம்பவம் குறித்து இந்திராதேவி, திருத்தங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்த விநாயகமூர்த்தி, மணிகண்டன், முத்தீஸ்வரன் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர்.
தகவல்கள்
இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, கொலை செய்யப்பட்ட முருகேஸ்வரனின் தந்தை மாரிமுத்து பெயரில் அதே பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் முருகேஸ்வரன் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் அந்த இடத்தில் பங்கு கேட்டு முருகேஸ்வரனின் உடன் பிறந்த சகோதரர்கள் பிரச்சினை செய்து வந்துள்ளனர்.
இதற்கு முருகேஸ்வரன் அந்த இடத்துக்குரிய பணத்தை சகோதரர்களுக்கு கொடுத்து விடுவதாக கூறி உள்ளார். இதனை அவர்கள் ஏற்கவில்லை. இந்தநிலையில் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் முருகேஸ்வரனின் வீட்டின் அருகில் விநாயகமூர்த்தி நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை முருகேஸ்வரன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விநாயகமூர்த்தி தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் முருகேஸ்வரனின் வீட்டிற்கு வந்து அவரிடம் தகராறு செய்து அவரை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.