மருமகள் உள்பட 5 பேர் கைது
பொள்ளாச்சியில் மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மருமகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகன கடனை அடைப்பதற்காக கொன்றது அம்பலமானது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மருமகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகன கடனை அடைப்பதற்காக கொன்றது அம்பலமானது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மூதாட்டி கொலை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்தவர் தெய்வானையம்மாள் (வயது 75). இவரது கணவர் இறந்து விட்டதால், தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மூதாட்டி இறந்து கிடப்பதாக பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் மூதாட்டியின் கைவிரல், கழுத்தில் காயங்கள் இருப்பதும், நகைகள் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. இதனால் தெய்வானையம்மாளை மர்ம நபர்கள் நகைக்காக கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
7½ பவுன் நகை
இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மூதாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூதாட்டியின் மருமகள் பானுமதி (40), ஈஸ்வரி (39) ஆகியோர் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ஈஸ்வரியின் 18 வயது மகன் மற்றும் அவரது நண்பர் கவுதம் (19) இருவரும் தெய்வானையம்மாளை கொலை செய்து விட்டு, 7½ பவுன் தங்க நகையை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. அதற்கு 16 வயது சிறுவன் உதவி செய்து உள்ளான். மேலும் மூதாட்டி வீட்டு பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரத்தை ஈஸ்வரி திருடி உள்ளார். இதுகுறித்து தகவல் தெரிந்தும் பானுமதி போலீசாரிடம் தெரிவிக்காமல் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
5 பேர் கைது
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரி, பானுமதி, 18 வயது சிறுவன், கவுதம், 16 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
மூதாட்டி கொலை சம்பவம் குறித்து கைதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
இருசக்கர வாகன கடன்
பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவரது 18 வயது மகன் 12-ம் வகுப்பு படித்து உள்ளார். அவர் மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று தாயிடம் கேட்டார். தொடர்ந்து மாத தவணை செலுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார். அந்த வாலிபர் மாதந்தோறும் பணம் கட்டி வந்து உள்ளார். இறுதியாக மோட்டார் சைக்கிளுக்கு ரூ.50 ஆயிரம் கட்ட வேண்டும். அதற்கான பணம் தன்னிடம் இல்லாததால், தனக்கு அறிமுகமான தெய்வானையம்மாள் கழுத்தில் கிடக்கும் நகை மற்றும் மோதிரங்களை பறிக்க திட்டமிட்டார்.
மூதாட்டி வீட்டில் நகையை கொள்ளையடிப்பது எப்படி என்பது குறித்து யூடியூப்பில் வீடியோ பார்த்து உள்ளார். அதன்படி சம்பவத்தன்று வாலிபர், தனது நண்பர் கவுதம், 16 வயது சிறுவன் ஆகியோர் மூதாட்டி வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த தெய்வானையம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை அந்த வாலிபர் பறித்து உள்ளார். அப்போது மூதாட்டி சத்தம் போட்டார். இதனால் வாலிபர், கவுதம் 2 பேரும் மூதாட்டியின் வாயை மூடி, கழுத்தை நெரித்து கொன்றனர். அப்போது சிறுவன் வீட்டு கதவை பூட்டி விட்டு வேறு யாரும் வருகிறார்களா என்று நோட்டமிட்டான்.
சிக்கியது எப்படி?
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் 7½ பவுன் நகையை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். மேலும் அந்த வாலிபர் தனது தாயிடம் மூதாட்டியை கொன்று நகைகளை திருடி விட்டேன் என்று கூறியுள்ளார். பின்னர் ஈஸ்வரி மூதாட்டி வீட்டுக்கு வந்து, அங்கு பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றார்.
மூதாட்டியை கொலை செய்தது குறித்து பானுமதிக்கு தெரிந்தும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல், கொலை, கொள்ளையை அரங்கேற்றியவர்களுக்கு உடந்தையாக இருந்து உள்ளார். ஆனால், ஈஸ்வரியின் கைரேகை பீரோவில் பதிந்து இருந்ததால் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 4 பேர் சிக்கினர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.