வக்கீல் உள்பட 5 பேர் கைது
கொரடாச்சேரி அருகே வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வக்கீல் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் உடலை ஊர்வலமாக கொண்டு சென்ற போது தகராறில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரடாச்சேரி அருகே வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வக்கீல் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் உடலை ஊர்வலமாக கொண்டு சென்ற போது தகராறில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வளரும் தமிழகம் கட்சி பிரமுகர்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). இவர் வளரும் தமிழகம் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்தார்.
நேற்று முன்தினம் இவர் திருவாரூர் கோர்ட்டில் ஒரு வழக்கில் ஆஜராக வந்துள்ளார். பின்னர் கோர்ட்டில் இருந்து வீட்டுக்கு திரும்பி செல்லும் வழியில் தன்னுடைய வக்கீலை வீட்டில் இறக்கிவிட்டு செல்வதற்காக கமலாபுரம் வழியாக சென்றார்.
ஓட, ஓட விரட்டிக்கொலை
கமலாபுரம் கடைவீதி அருகே சென்று கொண்டிருந்தபோது மன்னார்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த மற்றொரு கார் ராஜ்குமார் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. மேலும் அந்த காரில் இருந்து 8 பேர் கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கி வந்துள்ளனர்.
இதை பார்த்து ராஜ்குமார் மட்டும் காரில் இருந்து இறங்கி ஓடினார். ஆனால் அந்த கும்பல் ராஜ்குமாரை ஓட, ஓட விரட்டி சென்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.
3 தனிப்படைகள் அமைப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விளமல் பகுதியில் அவரது உறவினர்கள், நண்பர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக வளரும் தமிழகம் கட்சியின் மாநில தலைவர் பட்டாபிராமன் தலைமையில் ஏராளமானோர் திருவாரூர்-தஞ்சை சாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் ஒருவர் தான் கொண்டு வந்த பெட்ரோலை தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் இருந்த பெட்ரோல்பாட்டிலை பிடுங்கி அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்ெதாடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் மீது கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு நீடாமங்கலத்தை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் கொலை வழக்கில் ராஜ்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாா். பின்னர். இந்த வழக்கில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தளார்.
பழிக்குப்பழி
இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நடசே தமிழார்வன் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நடேச தமிழார்வன் மகன் ஸ்டாலின் பாரதி(32), நடேச தமிழார்வனின் அண்ணன் மகன் வீரபாண்டி(29), சூர்யா(21), மாதவன்(21), அரசு(20) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நடேச தமிழார்வன் கொலைக்கு பழிக்குபழியாக ராஜ்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஸ்டாலின் பாரதி வக்கீல் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு பணி
இதற்கிடையே அசம்பாவிதங்களை தவிர்க்க ராஜ்குமாரின் சொந்த ஊரான பூவனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மதியம் முதல் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொலை நடந்த நீடாமங்கலத்தில் கடைகள் அடைக்கப்பட்டது. கொலை வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி வளரும் தமிழகம் கட்சி சார்பில் நீடாமங்கலம் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சுவரொட்டிகள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது.
சாலையோர கடைகள் மீது தாக்குதல்
இதனால் நீடாமங்கலம், ஒளிமதி, பூவனூர் ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக நீடாமங்கலத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து ராஜ்குமார் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடலை திருவாரூரில் இருந்து பூவனூருக்கு அமரர் ஊர்தியில் கொண்டு வந்தனர். இந்த வாகனம் நேற்று மாலை 4.30 மணிக்கு நீடாமங்கலத்திற்கு வந்தது. அமரர் ஊர்திக்கு முன்னால் 200-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களிலும், ஏராளமான கார்களிலும் ராஜ்குமாரின் ஆதரவாளர்கள் வந்தனர்.
போலீசார் தடியடி
அப்போது சிலர் சாலையோரக்கடைகள் மீது தாக்குதல் நடத்தி தகராறில் ஈடுட்டனர். இதனால் அங்கிருந்த போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
தொடர்ந்து பூவனூர் நெடுஞ்சாலை பாலம் பகுதியில் ராஜ்குமார் உடலை கொண்டு சென்ற வாகனத்தை நிறுத்தினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உடல் அடக்கம்
இதனையடுத்து ராஜ்குமார் உடல் அங்கிருந்து அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடந்தது. பின்னர் பூவனூரில் உள்ள மயானத்தில் ராஜ்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக நீடாமங்கலம் பகுதியில் ராஜ்குமார் உடலை எடுத்து வரப்பட்ட போது பொதுமக்களை நெடுஞ்சாலை பகுதிக்குள் வரவிடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் திருவாரூர், நாகை போலீசார் செய்திருந்தனர்.