மதுரை ரெயில் விபத்தின்போது மாயமான சமையல் ஊழியர்கள் உள்பட 5 பேர் சிக்கினர்
மதுரை ரெயில் விபத்தின் போது மாயமான சமையல் ஊழியர்கள் உள்பட 5 பேரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை ரெயில் விபத்தின் போது மாயமான சமையல் ஊழியர்கள் உள்பட 5 பேரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரெயில் விபத்து
உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு 63 பேர் ரெயில் மூலம் மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரையில் அந்த பெட்டி மட்டும் தனியாக கழற்றி போடிலைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கு நேற்று முன்தினம் அதிகாலை டீ போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பெட்டியில் இருந்த 5 ஆண்கள், 4 பெண்கள் என 9 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் 6 பேர் ரெயில்வே ஆஸ்பத்திரியிலும், 2 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே இறந்த 9 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களின் உடல் அடையாளம் காணப்பட்டது. பின்னர் அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு மரப்பெட்டியில் அந்த உடல்கள் தனியாக வைக்கப்பட்டு மூடப்பட்டது. பின்னர் அந்த உடல்கள் 3 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டு விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாயமான 5 பேர் சிக்கினர்
இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உள்ளிட்ட 28 பேர் நேற்று மதுரையில் இருந்து விமானம் மூலம் லக்னோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சிறப்பு ரெயிலில் மொத்தம் 63 பேர் வந்ததாக பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதில் பலியானவர்கள், சிகிச்சை பெறுபவர்கள், ஊர் திரும்பியவர்கள் ஆகியோரை கணக்கெடுத்தபோது 5 பேர் மாயமானது தெரிய வந்தது. அவர்களை ரெயில்வே போலீசார் தேடி வந்தனர்.
மாயமான அவர்கள் 5 பேரையும் போலீசார் நேற்று பிடித்தனர். அதில் 2 பேர் சமையல் ஊழியர்கள் என்பது தெரியவந்தது, அவர்களிடம் விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தின் போது இவர்கள் எங்கு இருந்தார்கள். விபத்துக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.