கள்ளழகர் விழாவில் 5 பேர் பலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் -எடப்பாடி பழனிசாமி கண்டனம்


கள்ளழகர் விழாவில் 5 பேர் பலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் -எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய விழாவில் 5 பேர் பலியானதற்கு தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 பேர் மரணம் அடைந்த சம்பவத்தை 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொடரில் நான் குறிப்பிட்டு பேசினேன்.

அப்போது பதில் அளித்த அமைச்சர் வரும் ஆண்டுகளில் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் நல்லபடியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார் என்று பெருமை பேசினார்.

ஆனால் கடந்த 5-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் முற்றிலுமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக திட்டமிடாத காரணத்தாலும் 3 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததையும், ஒரு பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததையும், மற்றொரு இளைஞர் கோவில் மண்டப வாசலின் அருகில் கொலை செய்யப்பட்டதையும் அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். செயலற்ற இந்த தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

துயர சம்பவங்கள்

மேலும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சமாக மதுரை சித்திரை திருவிழாவில் பட்டாக் கத்தியுடன் இளைஞர்கள் நடனமாடிய காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. பட்டாக்கத்தியுடன் இருந்த இளைஞர்கள் சுதந்திரமாக உலா வந்ததை கண்டு பக்தர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

இவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்ததா? என்று தெரியவில்லை. இந்த நிகழ்வுகளை பார்க்கும்போது தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா? என்ற சந்தேகமும், போலீஸ் துறையினர் கைகள் கட்டப்பட்டு உள்ளதோ? என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பொதுமக்கள் கூடும் திருவிழா சமயங்களில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக 2 ஆண்டுகளாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தளிய நிகழ்வில் ஏற்பட்ட துயர சம்பவங்கள், தஞ்சை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தேர் திருவிழாவின்போது ஏற்பட்ட துயர சம்பவங்கள், நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏற்பட்ட துயர சம்பவங்கள் என்று தொடர்ச்சியாக நடைபெறும் துயர சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்க கூடியதாக உள்ளது.

உரிய பாதுகாப்பு

தி.மு.க. அரசு இனியாவது விழித்துக்கொண்டு இதுபோன்ற லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோவில் திருவிழாக்களின்போது தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வண்ணம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story