பட்டாசு உற்பத்தி செய்த 5 பேர் கைது
உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 பேர் ைகது
வெம்பக்கோட்டை அருகே உள்ள குகன்பாறையில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் பட்டாசு உற்பத்தி நடைபெறுவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் அந்த ஆலையில் சோதனை நடத்தினர்
அப்போது திருத்தங்கலை சேர்ந்த மணிகண்டன் (வயது 40), மஞ்சுநாத் குமார் (30), மதன் குமார் (32), விஜயகுமார்(40), மோகன் (50) ஆகியோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 20 கிலோ சோல்சாவெடிகள் மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பேன்சி ரக வெடிகள்
ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராஹிம் ஆய்வு நடத்தினர்.
அப்போது ஊத்துப்பட்டியில் அனுமதியின்றி பேன்சி ரக வெடிகள் தயார் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 15 அட்டை பெட்டிகளில் அனுமதியின்றி தயார் செய்து வைத்திருந்த பேன்சி ரக வெடிகளை பறிமுதல் செய்து அன்பின் நகரத்தை சேர்ந்த ஸ்டாலினை (42) கைது செய்தனர்.
மூலப்பொருட்கள்
கரிசல்பட்டியில் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராஹிம் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது மார்க்கநாதபுரத்தில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பட்டாசு ஆலையின் மேலாளர் வடிவேல் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பட்டாசு ஆலையில் இருந்த 30 கிலோ சரவெடிகள் மற்றும் மூலப்பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.