புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
கருமத்தம்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதியில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகராயம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த 2 வடமாநில வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் குமார் (40), ரஞ்சித்குமார் (26), சோகரம் (22), மாதரம் (30), தீபாரம் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 354 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கருமத்தம்பட்டி பகுதியில் சோதனை நடத்தியதில், 2 கடைகளில் புகையிலை விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 2 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.