5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி1,000 அரிசி கடைகள், ஆலைகள் மூடப்பட்டன-ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு
5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி கடைகள் மற்றும் ஆலைகள் மூடப்பட்டன. இதனால் ரூ.50 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அரிசி கடைகள், ஆலைகள்
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவு பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று தமிழகத்தில் அரிசி மொத்த விற்பனை வணிகர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, கடைவீதி மற்றும் புறநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் முன்பு கடையடைப்பு குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்து. மேலும் 60-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும் மூடப்பட்டன.
குறிப்பாக சேலம் லீ பஜார் வர்த்தகர் சங்கத்தில் உள்ள 300 கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. லீபஜாரின் நுழைவு வாசல்கள் அனைத்தும் பூட்டு போட்டு அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அங்கு வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அங்கு கடையடைப்பு தொடர்பாக அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்கப்பட்டிருந்தன.
ரூ.50 கோடி பாதிப்பு
இதுகுறித்து சேலம் செவ்வாய்பேட்டை நெல் அரிசி உணவுப்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ரத்தினவேல் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், காஞ்சீபுரம், ஆரணி, திண்டிவனம், செய்யாறு, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நெல் மூட்டைகள் அரவைக்கு வருகிறது. இந்த நிலையில் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி கடைகளும், 60-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வருமானமின்றி பாதிக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.