5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க 26 கிலோ மூடை அரிசி விற்பனை

மத்திய அரசின் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க, பொதுமக்களின் நலன் கருதி 26 கிலோ மூடை அரிசி விற்பனையை திருப்பூர் மாவட்ட வியாபாரிகள் தொடங்கியுள்ளனர்.
திருப்பூர்,
பண்டல் செய்யப்பட்டு விற்கப்படும் அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் 25 கிலோ அரிசி மூடையின் விலை ரூ.50 வரை உயரும் என்று அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டத்தை நடத்தினார்கள். இருப்பினும் கடந்த மாதம் 18-ந்தேதி முதல் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இதில் 25 கிலோ, 50 கிலோ, 75 கிலோ அரிசி மூடைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
26 கிலோ அரிசி மூடை
இந்த நிலையில் தற்போது 1 கிலோ முதல் 25 கிலோ வரை பண்டல் செய்யப்படும் அரிசி மூடைக்கு 5 சதவீத வரி விதிப்பு இருப்பதை தொடர்ந்து 26 கிலோ எடை கொண்ட மூடைகளை அரிசி ஆலைகள் விற்பனை செய்ய தொடங்கியுள்ளன. 26 கிலோ மூடைக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி கிடையாது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி 25 கிலோ மூடைக்கு பதிலாக 1 கிலோவை சேர்த்து 26 கிலோ மூடைகளாக அரிசி மொத்த விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூரில் உள்ள கடை களிலும் 26 கிலோ எடை கொண்ட அரிசி மூடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இல்லாமல் பொதுமக்கள் அவற்றை வாங்கி செல்கிறார்கள்.






