மயக்கப்பொடி கலந்த தண்ணீரை தெளித்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
ஜோலார்பேட்டை அருகே மயக்கப்பொடி கலந்த தண்ணீரை தெளித்து 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு காரில் தப்பிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே மயக்கப்பொடி கலந்த தண்ணீரை தெளித்து 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு காரில் தப்பிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
காரில் வந்த பெண்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் குண்டி மாரியம்மன் கோவில் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கமலம்மாள் (வயது 80). இவரது கணவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இந்த நிலையில் கமலம்மாள் தனது கணவரின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு திரும்பினார்.
அவரது வீட்டின் அருகே கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய ஒரு பெண் கமலம்மாவின் வீட்டுக்குள் சென்று அவருடன் பேச்சு கொடுத்தது. அப்போது 400 ரூபாயை, கமலம்மாவிடம் கொடுத்து செலவுக்கு வைத்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். பின்னர் அவருடைய முகத்தில் ஒரு டம்ளரில் இருந்த தண்ணீரை தெளித்துள்ளார்.
5 பவுன் நகை பறிப்பு
சிறிது நேரத்தில் கமலம்மாளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் அணிந்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. அதற்கு பதில் போலி நகை கழுத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வெளியே சென்று பாத்தபோது அங்கி நின்றிருந்த காரையும் காணவில்லை. அந்த பெண் ஏதோ மயக்கப் பொடி கலந்த தண்ணீரை தெளித்து, நகையை பறித்துக்கொண்டு காரில் தப்பிச்சென்றது தெரிய வந்தது.
உடனடியாக இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணை
மூதாட்டியின் வீட்டுக்கு வெளியே நின்ற காரில் டிரைவர் கதவை திறந்து வைத்து தயார் நிலையில் இருந்துள்ளார். நகையை பறித்துக்கொண்டு அந்தப்பெண் வந்ததும் இருவரும் காரில் தப்பிச் சென்றதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நகையை பறித்து சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப் பகலில் மூதாட்டி முகத்தில் மயக்கப்பொடி கலந்த நீரை தெளித்து நகை நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.