5 ஆயிரம் ஏக்கர் தக்காளி செடிகள் கருகின


5 ஆயிரம் ஏக்கர் தக்காளி செடிகள் கருகின
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:07+05:30)

கோவையில் பனியின் தாக்கம் காரணமாக 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்து இருந்த தக்காளி செடிகள் கருகின. எனவே உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

தொண்டாமுத்தூர்

கோவையில் பனியின் தாக்கம் காரணமாக 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்து இருந்த தக்காளி செடிகள் கருகின. எனவே உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தக்காளி சாகுபடி

கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளான தீத்திபாளையம், குப்பனூர், மாதம்பட்டி, சென்னனூர், தென்கரை, பூலுவப்பட்டி, நரசீபுரம், தேவராயபுரம், புள்ளப்பகவுண்டனூர், செம்மேடு மற்றும் பல பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து உள்ளனர்.

தக்காளி நாற்று நட்டு 75 நாட்களில் இருந்து காய்களை பறிக்க முடியும். இந்த தக்காளிக்கு தண்ணீர் குறைந்த அளவு போவதாலும், பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் ஏராளமான விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்து வருகிறார்கள்.

செடிகள் கருகின

இந்த நிலையில் தற்போது தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தக்காளி செடிகளில் பூக்கள் பிடிக்கும் காலமாக இருக்கிறது. சில இடங்களில் காய் அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கிறது. இதற்கிடையே தற்போது பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அதற்கு தாக்குபிடிக்க முடியாமல் தக்காளி செடிகள் கருகி வருகிறது.

இதன் காரணமாக தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாய சங்கத்தை சேர்ந்த தீத்திபாளையம் பெரியசாமி மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

5 ஆயிரம் ஏக்கர் பாதிப்பு

ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்ய ரூ.1 லட்சம் வரை செலவு ஆகிறது. நாற்று நட்ட பின்னர் 75 நாட்களில் இருந்து காய்களை அறுவடை செய்யலாம். இப்படி ஒரு செடியில் 3 நாட்களுக்கு ஒருமுறை என்று 75 நாட்களுக்கு காய்களை அறுவடை செய்ய முடியும்.

பெரும்பாலும் இந்த பகுதியில் கொடி அமைத்துதான் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கிடையே கடந்த 10 நாட்களாக இங்கு பனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஏராளமான செடிகள் கருகிவிட்டன. அதுபோன்று காய்கள் பிடிக்கும் நிலையில் இருந்த பூக்கள் அனைத்தும் உதிர்ந்துவிட்டன. சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகள் கருகியுள்ளன.

இழப்பீடு

இதன் காரணமாக விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இங்கு வந்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story