வேதாரண்யம் மீனவர்கள் 5 ஆயிரம் பேர் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததால் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து 5 ஆயிரம் மீனவர்கள் 5-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
நாகை,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
மீன்பிடி தொழிலை நம்பி ஐஸ் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், வேன் டிரைவர்கள் என ஏராளமானோர் தொழில் புரிந்து வருகிறார்கள். வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
படகுகள் நிறுத்தி வைப்பு
அதன்படி வேதாரண்யம் பகுதி மீனவர்கள் நேற்று 5-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல், மீன்பிடி வலைகளை பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று நாகையில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி தொழிலை நம்பி உள்ள ஐஸ்கட்டி உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேலை இழப்பு
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் சில்லரை மீன் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல மொத்த வியாபாரிகள், ஐஸ் உற்பத்தியாளர்கள், வேன் டிரைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
ஒரு சில மீனவர்கள் கடற்கரையில் வலை விரித்து உணவுக்காக மட்டும் மீன்பிடித்து வருகின்றனர். மீண்டும் பழையபடி மீன்பிடி தொழில் நடைபெற இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம்
இதைப்போல மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மீன்பிடிமுகத்தில் இருந்து சுமார் 350 விசைப்படகுகள், 300 நாட்டுப்படகுகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் கடந்த 17 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் வருமான இழப்பை சந்தித்து உள்ளனர்.
மீனவா்களின் படகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.