மாற்றுப்பாதை அமைத்து தரக்கோரி 5 கிராமத்தினர் போராட்டம்
ராமநாதபுரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் அதனை கடந்து செல்ல முடியாத 5 கிராம மக்கள் மாற்றுப்பாதை அமைத்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில்வே சுரங்கப்பாதை
ராமநாதபுரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது லாந்தை கிராமம். இந்த கிராமத்தையொட்டி கண்ணந்தை, பெரிய தாமரைக்குடி, சிறியதாமரைகுடி உள்ளிட்ட 5 கிராமங்களில் சுமார் 1,200 வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் கிராமங்களுக்கு செல்லும் வழியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி அப்பகுதியினர் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தனர். சுரங்கப்பாதையால் மக்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள் என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. ஆனால் அதற்கு மாறாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட நாள் முதல் சிறிய அளவில் மழை பெய்தாலும் இங்கு தண்ணீர் குளம்போல் தேங்கிவிடுகிறது.
தேங்கிய மழைநீர்
தொடர்ந்து இதுபோன்று தண்ணீர் தேங்கி வந்ததால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும், தங்களுக்கு சுரங்கப்பாதைக்கு பதிலாக ரெயில்வே கேட் அல்லது மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மேற்கண்ட ரெயில்வே சுரங்கப் பாதையில் 6 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் இந்த வழியாக பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கிராம தலைவர் தங்கவேலு தலைமையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக ரெயில்வே தண்டவாள பகுதியில் திரண்டனர்.
கூடாரம் அமைத்து போராட்டம்
இதையடுத்து ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தாசில்தார் ஸ்ரீதர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து மதுரையில் இருந்து ரமேஷ் என்பவரின் தலைமையில் பொறியாளர் குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். தண்ணீரை வெளியேற்றி தருவதாக அவர் உறுதி அளித்தார்.
இருப்பினும் மண்டல மேலாளர் வந்து தங்களுக்கு மாற்றுப்பாதை அமைத்து தர உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம். ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறி கூடாரம் அமைத்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று (14-ந்தேதி) மண்டல மேலாளர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்டது. அதுவரை தாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருந்த கிராம மக்கள் கூடாரத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.