மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை


மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை
x

மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோயம்புத்தூர்

கோவை

மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அடிக்கடி தகராறு

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 53), பி.எஸ்.என்.எல்.லில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உஷாராணி. இவர்களுக்கு தீபன் என்ற மகன் உள்ளார். குடிபோ தைக்கு அடிமையான ராஜாராம், தினமும் மது குடித்து விட்டு தனது மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார்.

இதனால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி மது குடித்து விட்டு வந்த ராஜாராமுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மனைவி தற்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த ராஜாராம் தனது மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து உள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த உஷாராணி அடுத்த நாள் காலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபாகாலனி போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல், மனைவியை கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாராமை கைது செய்தனர். இது தொடர்பாக கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

5 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ராஜாராமுக்கு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய பிரிவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், மனைவியை கொடுமைப்படுத்திய பிரிவுக்கு 2 ஆண்டு சிறையும், ரூ.500 அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து போலீசார் ராஜாராமை பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story