வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூர்,
காட்டுமன்னார்கோவில் அருகே வடக்குகொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா முகமது மகன் சாதிக் என்கிற முகமது சாதிக் (வயது 19). இவர் மளிகை கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், 9-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பாலியல் தொந்தரவு செய்து வந்தார். இதை அறிந்த சிறுமியின் தந்தை, முகமது சாதிக்கை கண்டித்தார். பின்னர் கடந்த 29.9.2021 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை முகமது சாதிக் கடத்தி, பல்வேறு இடங்களுக்கு சென்றார். பின்னர் தங்கும் விடுதிகளில் வைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இது பற்றி சிறுமியின் தந்தை காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது சாதிக்கை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் முகமது சாதிக் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மாவட்ட சமூக நலத்துறை மூலம் அரசின் ஏதாவது நிதியில் இருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.