மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு:விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்தவருக்கு 5 ஆண்டு சிறைவிழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு


மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு:விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்தவருக்கு 5 ஆண்டு சிறைவிழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த வழக்கில் விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா தகடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் சுபாஷ் (வயது 20). இவர் டிப்ளமோ சிவில் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 13.4.2020 அன்று இரவு சுபாஷ், இயற்கை உபாதையை கழித்துவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் சுபாஷ், வீடு திரும்பவில்லை. இதனால் அவரைத்தேடி பெற்றோர், அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றபோது அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி சுபாஷ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அந்த நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த மணி (58) என்பவர் போகியத்திற்கு வாங்கி 2½ ஏக்கர் அளவில் கரும்பும், 2½ ஏக்கர் அளவில் நெல்லும் பயிரிட்டதும், அந்த பயிர்களை காட்டுப்பன்றிகளிடம் இருந்து காப்பாற்ற, எவ்வித அனுமதியும் இன்றி திருட்டுத்தனமாக விவசாய நிலத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்ததும் அதில் சுபாஷ் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்திருப்பதும் தெரியவந்தது.

5 ஆண்டு சிறை

இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்து ஒருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக மணியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட மணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அந்த அபராத தொகையை சுபாஷின் பெற்றோருக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டார்.


Next Story