விவசாயி கொலையில் 5 வாலிபர்கள் கைது; காதல் திருமணத்தை தடுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்


வீரவநல்லூரில் விவசாயி கொலையில் 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். காதல் திருமணத்தை தடுத்ததால் அவரை தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் 1-வது தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பண்ணையார் குமார் என்ற அருணாசலகுமார் (வயது 44). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலையில் வீரவநல்லூர் ரெட்டியார்புரம் சாலையில் உள்ள தனது தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, அருணாசலகுமாரை ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக்கொலை செய்தது. பெரும் பரபரப்ைப ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

வீரவநல்லூர் யாதவர் நடுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (24). கூலி தொழிலாளியான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுகுடித்து விட்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இவர் நெல்லையை அடுத்த தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண்ணை கார்த்திக்குக்கு திருமணம் செய்வதற்காக பெண் வீட்டார் வீரவநல்லூருக்கு சென்று பலரிடம் விசாரித்தனர். அவர்கள், அருணாசலகுமாரிடம் விசாரித்தபோது, கார்த்திக் அடிக்கடி மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்ததாக கூறியுள்ளார். இதனால் பெண் வீட்டார் காதல் திருமணத்துக்கு சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து அந்த இளம்பெண், காதலரான கார்த்திக்கிடம் தெரிவித்தார். இதனால் அருணாசலகுமார் மீது கார்த்திக் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீரவநல்லூரில் உள்ள கோவில் விழாவில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக கார்த்திக் உள்ளிட்டவர்களுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அருணாசலகுமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை அறிந்த கார்த்திக் தனது காதல் திருமணத்தை அருணாசலகுமார் தடுத்ததாலும், தற்போது அவர் கோவில் தகராறு குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததாலும் ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அருணாசலகுமாரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கார்த்திக், அவருடைய நண்பர்களான வீரவநல்லூர் கம்பளத்தம்மன் கோவில் நடுத்தெருவைச் சேர்ந்த மாலையப்பன் மகன் கண்ணன் (21), கம்பளத்தம்மன் சன்னதி தெருவை சேர்ந்த சாஸ்தா குமார் மகன் வசந்த் (21), கம்பளத்தம்மன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த பரதன் மகன் கொம்பையா (23), வீரவநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் முத்துராஜ் (19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story