கொரோனா நோயாளிகளுக்கு 50 படுக்கைகள் தயார்
கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி டீன் சாந்தா அருள்மொழி கூறி உள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சீனாவில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டு உள்ளது.
அதன்படி கொரோனா பரிசோதனை கருவிகள் மற்றும் உபகரணங்களை பரிசோதித்து தயார் நிலையில் வைக்கவும், ஆக்சிஜன் செறிவூட்டிகளை சரி பார்க்கவும், ஆக்சிஜன் நிரப்பிய சிலிண்டர்களை அவசர கால பயன்பாட்டுக்கு தயாராக வைக்கவும் மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
50 படுக்கைகள்
மேலும் கொரோனா வார்டுகளில் படுக்கைகளை அதிகரிக்கப்பதோடு, முகக்கவசம், ரத்த அழுத்த பரிசோதனை கிட்டுகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பை மதிப்பீடு செய்ய இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் ஆஸ்பத்திரியில் தேவைக்கேற்ப ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளதா? என்பது அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் கேட்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவசர சிகிச்சை பிரிவில் 10 படுக்கைகளும், இதர பிரிவில் 40 படுக்கைகளும் என மொத்தம் 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
உபகரணங்கள் ஆய்வு
இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் டீன் சாந்தா அருள்மொழி கூறியதாவது:-
கொரோனா சிகிச்சை தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளபடி கொரோனாவால் நோயாளிகளின் சிகிச்சைக்காக 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களும் அவசர கால பயன்பாட்டுக்காக தயாராக உள்ளது. அதோடு சிகிச்சைக்கு தேவையான மருந்துகளும் கையிருப்பு உள்ளது.
மேலும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் உபகரணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சரி பார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.