50 வீடுகளுக்குள் மழைநீருடன் சாக்கடை தண்ணீரும் புகுந்தது


50 வீடுகளுக்குள் மழைநீருடன் சாக்கடை தண்ணீரும் புகுந்தது
x

50 வீடுகளுக்குள் மழைநீருடன் சாக்கடை தண்ணீரும் புகுந்தது

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக 50 வீடுகளுக்குள் சாக்கடை தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் தவித்தனர்.

வெளுத்து வாங்கிய மழை

கோவையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் மாநகர பகுதியில் ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 2 மணி நேரம் இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியதால், சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. தொடர்ந்து விடிய, விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. சாலையில் தேங்கி நின்ற தண்ணீரை பீய்ச்சியடித்தபடி வாகனங்கள் சென்றன.

தொடர் மழையின் காரணமாக கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் ரெயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் குளம்போன்று தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அதுபோன்று கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதை, வடகோவை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி சுரங்கப்பாதை, கிக்கானி ரெயில்வே பாலத்தின் கீழ்ப்பகுதி ஆகியவற்றில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது.

தண்ணீரை அகற்றும் பணி

இதைத்தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு தேங்கி நின்ற தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவினாசி ரோடு, வடகோவை மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

முன்னதாக மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியை மாநகராட்சி மேயர் கல்பனா, ஆணையாளர் பிரதாப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், விரைவில் தண்ணீரை அகற்ற உத்தரவிட்டனர். அத்துடன் சில பகுதிகளில் தண்ணீர் வடிந்ததும் அங்கு சேறும் சகதியுமாக காணப்பட்டது. அதையும் அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

வீடுகளுக்குள் புகுந்தது

கோவை மாநகர பகுதியில் பெய்ததுபோன்றே புறநகர் பகுதியிலும் மழை பெய்தது. இதன் காரணமாக பேரூர் அருகே உள்ள ஆறுமுகக்கவுண்டனூர் நரிக்குறவர் காலனியில் இருக்கும் 15-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அதுபோன்று கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பொன்னையராஜபுரம் பிருந்தா லே-அவுட் பகுதியிலும் 35 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீரில் சாக்கடை தண்ணீரும் கலந்து இருந்ததால் வீடுகளுக்குள் கடும் துர்நாற்றம் வீசியது.

இதன் காரணமாக வீடுகளுக்குள் இருந்த ஷோபா, கட்டில், மெத்தை என அனைத்தும் மழைநீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதியடைந்தனர். பின்னர் மழை நின்றதும் வீடுகளுக்குள் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அதுபோன்று குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, உள்ளிட்ட சில பள்ளி வளாகத்துக்குள்ளும், கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டிலும் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு வீடு மழைக்கு இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நிருபர்களிடம் கூறும்போது, அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி, கிக்கானி பாலம், லங்கா கார்னர், வடகோவை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி உள்பட 6 இடங்கள் தாழ்வான பகுதிகள் என்று கண்டறிந்து அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை அதிநவீன மின்மோட்டார் மூலம் உடனடியாக அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சரிசெய்யப்பட்டது. பருவமழையை முன்னிட்டு மாநகராட்சியின் 5 மண்டலத்துக்கும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டு தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கும் இடத்தை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

துடியலூர்

இதேபோல துடியலூர், கவுண்டம்பாளையம், தொப்பம்பட்டி, இடையர்பாளையம், பன்னிமடை, கணுவாய், ஆனைகட்டி, சின்ன தடாகம், பெரிய தடாகம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக சின்ன தடாகம் பகுதியில் வீதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.



Next Story