நகைக்கடையில் ரூ.50 லட்சம் நகைகள் கொள்ளை
நகைக்கடையில் கியாஸ் வெல்டிங் மூலம் கதவை வெட்டி எடுத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகளை கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பாபுலால் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையின் உரிமையாளர்கள் நித்தீஷ், லோகேஷ் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். நேற்று காலை வழக்கம்போல் கடை உரிமையாளர்கள், ஊழியர்களுடன் கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது கீழ்தளத்தில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. தங்க நகைகள், வெள்ளிப்பொருட்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் முதல் மற்றும் 2-வது மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களையும் காணவில்லை.
இரும்பு கதவை வெட்டி எடுத்து...
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் 3-வது மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள இரும்பு கதவு, ஒரு நபர் உள்ளே நுழையும் வகையில் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் கதவு அருகே சிறிய கியாஸ் சிலிண்டர், வெல்டிங் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் கிடந்தன. நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டிச் சென்றதை நோட்டமிட்ட கும்பல், பின்புறத்தில் ஏணி மூலமாக 3-வது மாடிக்கு ஏறி, வெல்டிங் கியாஸ் மூலம் இரும்பு கதவை வெட்டி எடுத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், 30 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
பல கோடி ரூபாய் நகைகள் தப்பியது
மேலும் கொள்ளை கும்பல், கடையில் இருந்த லாக்கரையும் உடைக்க முயன்றுள்ளது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அதில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பியது. இந்த துணிகர கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய மர்மநபர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.