முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது
முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது
கோவை
அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை மற்றும் பா.ஜனதா அரசை கண்டித்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்ற திராவிடர் தமிழர் பேரவை அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் நிர்வாகி நாகராஜ் தலைமையில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி வருமான வரித்துறை அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் முன் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது, அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அ.தி.மு.க. ஆட்சியில் சுமத்தப்பட்ட வழக்கு பேசி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது சட்டவிரோதமாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இது கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் செந்தில்பாலாஜி மீது விசாரணையை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையேல், ஒருமித்த கருத்துடைய அமைப்புகளை திரட்டி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என கூறினர்.