மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்-காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணை
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அணை முழு கொள்ளளவை (120 அடி) எட்டி நிரம்பியது.
இதன் காரணமாக அணைக்கு வரும் உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடிக்கு மேல் வரும்பட்சத்தில் 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்படுகிறது.
50 ஆயிரம் கனஅடி
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் இரவு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் உபரி நீர் 16 கண்மதகுகள் வழியாக மீண்டும் வெளியேற்றப்பட்டது.
இதனிடையே நேற்று காலை வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக வந்த தண்ணீர், மாலையில் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர், உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
எச்சரிக்கை
இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக தண்ணீ்ர் திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாகனங்களில் ெசன்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.