50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது


50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

பைக்காரா நீர் தேக்கத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு உள்ளன.

நீலகிரி

ஊட்டி,

பைக்காரா நீர் தேக்கத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு உள்ளன.

மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் மூலம் வருமானத்தை பெருக்குவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மீன் உற்பத்தி, தரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இதன் ஒரு பகுதியாக ஆற்று நீர் நிலைகளில் கெண்டை மீன் குஞ்சுகளின் வளத்தை பெருக்க திட்டமிட்டு, ஆறுகளில் நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் 2 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் விட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

50 ஆயிரம் குஞ்சுகள்

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், ஊட்டி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், புனித் நகர், டி.ஆர்.பஜார் பகுதியில் உள்ள பைக்காரா நீர் தேக்கத்தில் முதல் கட்டமாக 50 ஆயிரம் எண்ணிக்கையிலான சாதா கெண்டை மீன் குஞ்சுகளை விடும் பணிகள் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பவானிசாகர், ஊட்டி உதவி இயக்குனர்கள் ஜோதிலட்சுமணன், கதிரேசன் உள்பட பலர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பைகளில் இருந்த மீன் குஞ்சுகளை நீர்தேக்கத்தில் விட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நீலகிரியில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விட திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக தற்போது 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இதேபோல் ஜெயந்தி நகரில் உள்ள கிளன்மார்கன், 6-வது மைல் பகுதியில் உள்ள காந்தல் கால்வாய், தலைகுந்தா, கவர்னர் சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் 1½ லட்சம் மீன் குஞ்சுகள் தொடர்ச்சியாக விடப்பட உள்ளது என்றனர். இதில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, பங்கு மீனவர்கள், மீன் வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கடந்த மாதம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவலாஞ்சி அணையில் 6 ஆயிரம் டிரவுட் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.


Next Story