தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடப்பட்ட 50 ஆண்டு பழமையான ஆலமரம் துளிர்விட்டது


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடப்பட்ட 50 ஆண்டு பழமையான ஆலமரம் துளிர்விட்டது
x
தினத்தந்தி 28 Jun 2023 1:02 AM IST (Updated: 28 Jun 2023 4:47 PM IST)
t-max-icont-min-icon

சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட 50 ஆண்டு பழமையான ஆலமரம் வேரோடு பிடுங்கி தஞ்சை கலெக்டர்அலுவலகத்தில் நடப்பட்டது. அந்த மரம் தற்போது துளிர்விட்டு வளர்ந்து வருகிறது.

தஞ்சாவூர்

சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட 50 ஆண்டு பழமையான ஆலமரம் வேரோடு பிடுங்கி தஞ்சை கலெக்டர்அலுவலகத்தில் நடப்பட்டது. அந்த மரம் தற்போது துளிர்விட்டு வளர்ந்து வருகிறது.

50 ஆண்டு பழமையான ஆலமரம்

தஞ்சை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியின் போது பழமை வாய்ந்த மரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இதையடுத்து அகற்றப்படும் ஒரு மரத்துக்கு பதிலாக 10 மரங்கள் நடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை மணிமண்படத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் வல்லம் நம்பர் 1 சாலையில் விரிவாக்க பணி நடைபெற்ற போது அங்கு இருந்த 50 ஆண்டு பழமையான ஆலமரம் அகற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த மரத்தை வேரோடு பிடுங்கி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடுவது எனவும் நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர்.

மரம் துளிர்விட்டது

அதன்படி சம்பவ இடத்தில் இருந்து 3 கி.மீ.தூரம் உள்ள தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு கிரேன் மூலம் தூக்கிவரப்பட்டு, ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு ஆலமரம் நடப்பட்டது. இதனை அப்போதைய கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நட்டு தண்ணீர் விட்டார். மேலும் மரம் காய்ந்து விடாமல் இருப்பதற்காக சுற்றிலும் தார்ப்பாய் சுற்றப்பட்டு, மரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து விடப்பட்டது.

தற்போது மரம் நடப்பட்டு 40 நாட்களை கடந்த நிலையில் நன்றாக துளிர்விட்டு வளர்ந்து வருகிறது. இதையடுத்து மரத்தின் மேல் பகுதியில் கட்டப்பட்டு இருந்த தார்ப்பாயும் அகற்றப்பட்டது. மேலும் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் தண்ணீர் விட்டு மரத்தை பராமரித்து வருகிறார்கள்.


Next Story