50 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத கிராமத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு


50 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத கிராமத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

50 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத கிராமத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே விக்ரபாண்டிபுரம் ஊராட்சிக்குட்பட்ட சண்முகபுரத்தில் 100-க்கு மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 50 ஆண்டுக்கு மேலாக மின்சார வசதி இல்லாததால் கிராமத்தில் பெற்றோர்கள் இரவில் தீப்பந்தம் ஏந்தி மாணவர்களை படிக்க வைக்கும் நிலை இருந்து வருகிறது.

இதுகுறித்து கடந்த 3-ம் தேதி தினத்தந்தியில் செய்தி வெளியானது. மேலும் இதுகுறித்து கிராமமக்கள் நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மனு அளித்தனர். அதன் அடிப்படையில் சண்முகபுரத்திற்கு நேற்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள காலனி குடியிருப்பு பகுதிக்கு சென்று 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளை பார்வையிட்டு அங்கு தெருவிளக்கு அமைத்தல், குடிநீர் இணைப்பு வழங்குதல், சாலை வசதி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இங்கு இரு உறவினர்கள் இடையே இடப்பிரச்சினை இருப்பதை அறிந்து அவர்களை அழைத்து பேசி அனைவரும் சமாதானமாக இருக்க வேண்டுமென அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்களின் அடிப்படை தேவைக்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் முருகன், முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரவி, கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், காவிரி கூட்டு குடிநீர் உதவி பொறியாளர் வடிவேல் குமரன், உதவி செயற்பொறியாளர் ஜம்பு முத்துராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் மூர்த்தி ஆகியோர் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story