50 ஆண்டுகள் பழமையான வேப்பமரங்களின் கிளைகள் வெட்டி அகற்றம்


50 ஆண்டுகள் பழமையான வேப்பமரங்களின் கிளைகள் வெட்டி அகற்றம்
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதால் அந்த மரங்கள் பட்டுபோக வாய்ப்புள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியில் 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதால் அந்த மரங்கள் பட்டுபோக வாய்ப்புள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பழமையான வேப்ப மரங்கள்

மன்னார்குடி காந்தி ரோட்டில் நகராட்சி பென்லண்ட் மாடல் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர் அருகே 50 ஆண்டுகள் பழமையான வேப்ப மரங்கள் வரிசையாக இருந்தன. இந்த மரங்கள் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் கிளைகள் பரப்பி பசுமையாக இருந்து அப்பகுதி முழுவதும் நிழல் தந்து வந்தது.

மேலும் பறவைகள், சிறு, சிறு ஊர்வன விலங்குகள் என பல உயிரினங்களுக்கு உயிர் பாதுகாப்பு அரணாகவும் இந்த வேப்ப மரங்கள் இருந்தன.

கிளைகள் வெட்டி அகற்றம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த மரங்களின் அனைத்து கிளைகளும் திடீரென வெட்டப்பட்டது. இதனால் அந்த மரங்கள் மொட்டையாக காட்சியளித்தன. இதனை கண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வரும் காலகட்டத்தில் மரங்களை பாதுகாக்கவும், மரங்களை வளர்க்கவும் அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

அதே போல கோர்ட்டுகளும் மரங்களை வெட்டுவதற்கு கடும் நிபந்தனைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த மரங்களின் கிளைகள் முற்றிலும் வெட்டப்படுவதற்குமுன் அரசு அதிகாரிகள் அனுமதி பெறப்பட்டதா? முறையான அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பட்டுபோக வாய்ப்பு...

கிளைகள் முற்றிலும் வெட்டப்பட்டதால் இந்த வேப்ப மரங்கள் பட்டு போக வாய்ப்புள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெட்டப்பட்ட மரங்கள் உடனடியாக உயிர் பிழைக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story