திருக்கோவிலூரில் ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
திருக்கோவிலூரில் ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் பகுதியில் உள்ள கடைகளில் ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பிரசாத், அன்புபழனி, கதிரவன் ஆகியோர் சந்தப்பேட்டை சாலை, வடிவேல் நகர் விரிவாக்கம், மார்க்கெட் மற்றும் கட்ட கோபுரம் ஆகிய பகுதிகளில் மாம்பழம் விற்பனை செய்யும் 15 கடைகள் மற்றும் 3 குடோன்களில் ஆய்வு செய்தனர். அதில் 2 கடைகளில் ரசாயன கற்களால் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 2 கடைகளில் அழுகிய நிலையில் வாழைப்பழங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் மற்றும் 250 கிலோ அழுகிய நிலையில் இருந்த வாழைப்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் எடுத்து சென்று அழித்தனர்.