கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜகுமார் கொண்ட குழுவினர் களியக்காவிளை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அதை தொடர்ந்து ஆட்டோவில் சோதனை செய்தபோது அதில் 13 கேன்களில் 500 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மண்எண்ணெயை கேராளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் மண்எண்ணெய் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த அதிகாரிகள் மண்எண்ணெயை காப்புக்காடு அரசு குடோனிலும், ஆட்டோவை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.