ரூ.500 வழிப்பறிக்காக குண்டர் சட்டமா?


ரூ.500 வழிப்பறிக்காக குண்டர் சட்டமா?
x

ரூ.500 வழிப்பறிக்காக குண்டர் சட்டமா? கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட்டு வாலிபரை உடனடியாக விடுவிக்க உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெமிஷா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், எனது கணவர் தாம்சன் (வயது 33). இவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு நெல்லை மாவட்ட கோர்ட்டு, ஜாமீன் அளித்தது. இதற்கிடையே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். என் கணவர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கணவருக்கு கீழ்கோர்ட்டு ஜாமீன் அளித்தபோதும், அவசர அவசரமாக அவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுத்து, வெளியில் வர முடியாதபடி போலீசார் சிறையில் வைத்துள்ளனர். இது சட்டவிரோதமானது என்றார்.

அதற்கு அரசு வக்கீல், மனுதாரர் கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதுதொடர்பான உத்தரவை அவர் பெற மறுத்துவிட்டார் என்றார். விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ஒருவரை மிரட்டி ரூ.500-ஐ பறித்ததற்காகவும், சிலரை மிரட்டியதாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் மனுதாரர் கணவர் உள்ளிட்ட சிலர் மீது வழக்குபதிவு செய்தும், அதன் அடிப்படையில் மனுதாரர் கணவர் மீது குண்டர் தடுப்பு நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

குண்டர் தடுப்புச்சட்டத்தை தமிழக அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று புள்ளி விவரங்களுடன் கடந்த மாதம் 4-ந்தேதி விரிவான உத்தரவை நாங்கள் பிறப்பித்து இருந்தோம். அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்த வழக்கும். இதில் ஒரே ஒரு சம்பவத்திற்காக தடுப்புக்காவல் சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது. எனவே எங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரர் கணவரை உடனடியாக விடுவிக்கும்படி இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறோம்.

இந்த உத்தரவை வேறு வழக்குகளுக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதன் அடுத்தகட்ட விசாரணை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story