சென்னை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு 5 ஆயிரம் புத்தகங்கள் - மேயரிடம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்


சென்னை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு 5 ஆயிரம் புத்தகங்கள் - மேயரிடம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
x

சென்னை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு 5 ஆயிரம் புத்தகங்களை மேயர் பிரியாவிடம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

சென்னை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தனக்கு பூங்கொத்து மற்றும் சால்வைகளை வழங்குவதை தவிர்த்து புத்தகங்களை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி தனக்கு வரும் புத்தகங்களை பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் வழங்கி வருகிறார். அவரை பின்பற்றி தனக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பரிசாக வழங்கப்பட்ட புத்தகங்களை சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் நலனுக்காக பள்ளி நூலகங்களுக்கு வழங்குவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியாவிடம், 5 ஆயிரத்து 191 புத்தகங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும், 92 நடுநிலைப்பள்ளிகளும், 119 தொடக்கப்பள்ளிகளும் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளின் நூலகங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்த சிறப்புத்திட்ட அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள், பள்ளி நூலகங்களிலிருந்து புத்தகங்களைப்பெற்று வீட்டிலும் விரும்பி வாசித்து பயன்பெறும் வகையில் பள்ளி இல்ல நூலகம் என்ற திட்டம் ஆகஸ்டு மாதம் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி 77.4 சதவீத மாணவர்கள் தமிழ் மொழி புத்தகங்களையும், 22.6 சதவீத மாணவர்கள் ஆங்கில மொழி புத்தகங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story